பணியின் போது இறந்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி தூத்துக்குடியில் நடந்தது
பணியின் போது இறந்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடந்தது.
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி லடாக் பகுதியில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேரை சீன ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் உயிர் நீத்த போலீஸ் அதிகாரிகள், மற்றும் போலீசார் 414 பேருக்கும், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்றும், அவர்களின் தியாகம் வீண்போகாது என்றும், தியாகத்தை போற்றும் வகையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்காக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூணில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நினைவுத்தூணில் போலீசார் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்பிரகாஷ் (தனிப்பிரிவு), முத்து (தென்பாகம்), பார்த்திபன் (வடபாகம்), ரேனியஸ் ஜேசுபாதம் (மத்தியபாகம்), கோமதி (தெர்மல்நகர்), போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், வேலாயுதம், ஊர்க்காவலபெருமாள், சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story