மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 6:53 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோவிலுக்கு அருகில் திருமூர்த்திஅணை, படகு இல்லம், வண்ணமீன் காட்சியகம், சிறுவர்பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

இந்த அருவிக்கு மேற்குதொடர்ச்சிமலையில் உள்ள கொட்டைஆறு, பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டிஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும், இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும், நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மேற்கு தொடர்ச்சிமலையில் மழை தீவிரமடைந்தது. இதனால் அங்குள்ள நீராதாரங்கள் மூலமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

இதன்காரணமாக பஞ்சலிங்க அருவியில் நிலையான நீர்வரத்து இருந்து வந்தது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து வந்தனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சிமலையில் கனமழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டியது. அந்த வெள்ளம் நேற்று அதிகாலையில் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

மேலும் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை யொட்டி அதில் குளிப்பதற்கு சுற்றலா பயணிகளுக்கு 2-வது நாளாக நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து சுற்றலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள பாலாற்றில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை யொட்டி அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Next Story