தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2018 11:15 PM GMT (Updated: 21 Oct 2018 7:08 PM GMT)

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது என்றும், தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்றும் சேலம் உத்தமசோழபுரத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோழபுரத்தில் பூலாவரி மேம்பாலம் அருகில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்று விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், இஸ்திரிபெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு நல உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். வழியிலேயே செயல்பட்டு கழகத்தை கட்டிக்காத்து, கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சி தலைவரும் அவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. தி.மு.க.தலைவராக இருந்த கருணாநிதி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிறைய வழியில் துன்பத்தை கொடுத்தார். அந்த துன்பத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு நமக்கு வாழ்வு தந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ? முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. தொண்டர்கள் நிறைந்த அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாம் தான் அவர்களுக்கு வாரிசு. ஆனால் தி.மு.க.வில் அப்படி இல்லை. அது ஒரு குடும்ப கட்சி.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தினமும் பொய் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எப்போது பார்த்தாலும் பொய் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. தி.மு.க.இனிமேல் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. அ.தி.மு.க.ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். யார் ஊழல் ஆட்சி நடத்தினார்கள்? ஊழல் என்றாலே அது தி.மு.க.தான். வீராணம் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்ததால் 1,000 குழாய்கள் பழுதடைந்து காணப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் புதிய வீராணம் குடிநீர் திட்டம் செயல்படுத்தியதன் விளைவாக சென்னைக்கு சீரான முறையில் குடிநீர் கிடைத்து வருகிறது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி சென்னையில் தனி கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோர்ட்டில் முதலில் விசாரணைக்கு வந்தது மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு தான். தி.மு.க.ஆட்சியில் இருந்தபோது 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவர்களது வழக்கை தனி கோர்ட்டு விரைவில் விசாரிக்க உள்ளது. அவர்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். இதனால் தி.மு.க.வில் நடந்த தவறை மறைப்பதற்காக அவர்கள் அ.தி.மு.க.ஆட்சி மீது வீண்பழி சுமத்தி வருகிறார்கள்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை கண்டறிந்து அவற்றை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். எனவே, அ.தி.மு.க.வுக்கு அனைவரும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story