சங்ககிரி அருகே உயர் மின்கோபுரம் அமைப்பு: ஆய்வு பணிக்கு சென்ற தாசில்தார் ஜீப் சிறைபிடிப்பு போலீசார் வந்து மீட்டனர்


சங்ககிரி அருகே உயர் மின்கோபுரம் அமைப்பு: ஆய்வு பணிக்கு சென்ற தாசில்தார் ஜீப் சிறைபிடிப்பு போலீசார் வந்து மீட்டனர்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 2018-10-22T02:51:26+05:30)

சங்ககிரி அருகே உயர் மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக ஆய்வு பணிக்கு சென்ற தாசில்தார் ஜீப்பை விவசாயிகள் சிறைபிடித்தனர். போலீசார் விரைந்து வந்து ஜீப்பை மீட்டனர்.

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவிற்கு உட்பட்ட வீராட்சிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தின் வழியாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தாராபுரம் வரை மத்திய அரசு நிறுவனம் (பவர்கிரிட்) உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்கிறது.

இதுகுறித்து ஆய்வு செய்ய நேற்று காலை 10 மணி அளவில் சங்ககிரி தாசில்தார் அருள்குமார், துணை தாசில்தார்கள் சிவராசு, ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், பவர்கிரிட் பொறியாளர்கள் ஆகியோர் வீராட்சிபாளையம் அக்ரஹாரம் கிராமம் மங்கரங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தனர். அங்குள்ள ஒருவருடைய விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைய உள்ள இடத்தை அளவீடு செய்தனர். அங்கு ஜி.பி.எஸ். கருவியுடன் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

அப்போது சுமார் 50 விவசாயிகள் திரண்டு வந்து தாசில்தார் அருள்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பவர்கிரிட் பொறியாளர்களை தடுத்தனர். பின்னர் அவர்கள் தாசில்தார் ஜீப்பை சிறை பிடித்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமாருக்கு, தாசில்தார் அருள்குமார் தகவல் கொடுத்தார்.

பின்னர் அந்த இடத்தில் இருந்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வீராட்சிபாளையத்தில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகில் உட்கார்ந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாசில்தார் ஜீப்பை மீட்டனர். பின்னர் அதை தாசில்தார் அருள்குமாரிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் அருள்குமார் ஜீப்பை எடுத்து கொண்டு அலுவலகத்திற்கு சென்றார். அதனால் மங்கரங்கம்பாளையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தாசில்தார் அருள்குமார் கூறியதாவது:-

சங்ககிரி தாலுகாவில் வீராட்சிபாளையம், மொத்தையனூர், சின்னகவுண்டனூர், தேவண்ணகவுண்டனூர் கிராமங்களின் வழியாக மத்திய அரசு பவர்கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி குறித்து 2 அல்லது 3 நாட்களில் சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) வேடியப்பன் தலைமையில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள வேண்டி விவசாயிகளிடம் தகவல் தெரிவிக்கவும், யார், யார் விவசாய நிலத்தில் எவ்வளவு இடம் எடுக்கப்படுகிறது என பார்வையிடவும் வந்திருந்தேன். அப்போது ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு செய்தபோது விவசாயிகள் ஒன்றுகூடி எங்கள் விவசாய நிலங்களில் அளவீடு செய்யக்கூடாது என எங்களை பணிசெய்ய விடாமல் தடுத்தனர். மேலும் எங்கள் வாகனத்தை சிறைபிடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து ஜீப்பை மீட்டு கொடுத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story