சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட குமரி மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்


சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட குமரி மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 3:32 PM GMT)

சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட குமரி மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இதேபோல் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில், சமம் குடிமக்கள் இயக்க கடிகை ஆன்றனி மற்றும் சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய விஜயன் (வயது 33), இவருடைய சகோதரர் விவேக் (27), மேல்மிடாலத்தை சேர்ந்த ஸ்மைலின் (34), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செழியன் ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் அரேபிய முதலாளி ஒருவரின் படகு மூலம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 2–ந் தேதி அந்த வழியாக வந்த கடற்கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஸ்மைலின் என்பவருக்கு ஒரு கண்ணில் முழுமையாக பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அரேபிய முதலாளியின் பிடியில் உள்ளனர். 6 மாத காலமாக மீனவர்களுக்கு அவர்கள் மீன்பிடித்ததற்கான பணத்தை வழங்கவில்லை. அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் அந்த முதலாளி முன்வரவில்லை. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட அவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஸ்மைலினுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரவேண்டும். மேலும் அவருடன் உள்ள 3 மீனவர்களையும் ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்திய வெளிஉறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சவுதி அரேபிய நாட்டுக்கான இந்திய தூதர் அகமத் ஜாவத் ஆகியோருக்கும் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதர்ஷ் கிருஷ்ணா என்ற ஆதிக் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

இளைஞர்களுக்கு நிரந்தர வேலையில்லாத காரணத்தாலும், பலர் வேலையில்லாமல் இருப்பதாலும் வங்கியில் பெற்ற கல்விக்கடனை திரும்ப செலுத்த இயலாமல் துன்பப்படுகின்றனர். அவர்களால் வட்டியைக்கூட சரியாக கட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி அலுவலர்கள் வீடு தேடி வந்து பணம் வசூலிக்கும் செயல் ஏழை மக்களுக்கு மன உளைச்சலை தருகிறது. எனவே தமிழக முதல்–அமைச்சர் மிக விரைவில் கல்விக்கடனை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல மத்திய அரசு, தனிநபருக்கு குறைவாக உள்ள கல்விக்கடனை தள்ளுபடி செய்தாலே பல இளைஞர்களின் வாழ்க்கை மேம்படும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் பலர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

குருந்தங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளம் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதைச்சுற்றிலும் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது பெரியகுளம் 80 ஏக்கர் அளவில் சுருங்கியுள்ளது. பலர் பெரிய குளத்தின் கரையை ஆக்கிரமித்து தென்னை மரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட மதுரை ஐகோர்ட்டு கிளை பல உத்தரவுகளை பிறப்பித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமலே உள்ளனர்.

எனவே கலெக்டர், விவசாயத்தின் நலன் கருதி பெரியகுளம் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story