திருப்பூரில் காணாமல் போன பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டிலேயே பிணமாக மீட்பு


திருப்பூரில் காணாமல் போன பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டிலேயே பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 11:15 PM GMT (Updated: 2018-10-22T21:56:43+05:30)

திருப்பூரில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் அவர் சொந்த வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார். செல்போன் சிக்னல் மூலமாக உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த மகாவிஷ்ணு நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 46). இவருக்கு கவிதா என்ற மனைவியும், 1 மகள் மற்றும் மகன் உள்ளனர். அந்த பகுதியில் செந்திலுக்கு 2 தளங்கள் கொண்ட கட்டிடம் உள்ளது. இதில் மேல்தளத்தில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கீழ் தளத்தில் உள்ள 4 வீடுகளை வாடகைக்கு செந்தில் விட்டுள்ளார்.

மேலும் அதே கட்டிடத்தின் கீழ் தளத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அவர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் செந்தில் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 20–ந்தேதி காலை சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதாக மனைவி கவிதாவிடம் கூறி விட்டு சென்றுள்ளார். மாலையில் செந்தில் செல்போனுக்கு அவருடைய மனைவி கவிதா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது. அவர் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் உறவினர் வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.

பின்னர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் செந்தில் செல்போன் சிக்னலை கண்காணித்தனர். இதில் செந்தில் அவர் வீட்டு பகுதியில் இருப்பதாகவே காட்டியது. இதையடுத்து செந்தில் குடும்பத்தினர் அக்கம்பக்கம் முழுவதும் தேடுதலை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை செந்தில் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஒரு அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில் படுத்த நிலையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டதும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், நோயினால் அவதிப்பட்டு வாழ்க்கையில் விரக்தியடைந்த செந்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story