தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் கோபுரத்தை தூய்மைப்படுத்த சாரம் அமைக்கும் பணி மும்முரம்


தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் கோபுரத்தை தூய்மைப்படுத்த சாரம் அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 5:23 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் கோபுரத்தை தூய்மைப்படுத்த சாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்கட்டாக திகழும் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இதை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்தான். உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது.

இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.


இந்த கோவிலின் விமானகோபுரம் 216 அடி கொண்டது. இந்த கோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்த கோவிலின் மராட்டா நுழைவு வாயிலும், அதைத்தொடர்ந்து கேரளாந்தகன் கோபுரமும், அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரமும் உள்ளன.

ராஜராஜசோழன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர்தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக கேரளாந்தகன் வாயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன், ராஜராஜன், விமான கோபுரம் அனைத்தும் கடந்த 2008–ம் ஆண்டு புதுப்பிக்கும்பணி நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரத்தில் இருந்த பாசிகள், பறவைகளின் எச்சம் போன்றவை சுத்தப்படுத்தப்பட்டன.

தஞ்சை பெரியகோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆயத்தமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக கேரளாந்தகன் கோபுரம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கோபுரத்திற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் ரசாயன கலவைகளை கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பளிச்சென புதுப்பொலிவுடன் அந்த கோபுரம் காட்சி அளிக்கிறது.


அடுத்தகட்டமாக ராஜராஜன் கோபுரத்தை தூய்மைப்படுத்துவதற்காக இரும்பு கம்பிகளை கொண்டு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி முடிந்தவுடன் கோபுரத்தை ரசாயன கலவைகளை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். இப்பணி முடிந்தவுடன் 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் தூய்மைப்படுத்தப்படும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story