அரக்கோணம் அருகே பெண்ணிடம் உல்லாசமாக இருந்து விட்டு கழுத்தை நெரித்து கொலை வாலிபருக்கு வலைவீச்சு


அரக்கோணம் அருகே பெண்ணிடம் உல்லாசமாக இருந்து விட்டு கழுத்தை நெரித்து கொலை வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:30 AM IST (Updated: 22 Oct 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே குருவராஜபேட்டையில் விதவை பெண்ணிடம் உல்லாசமாக இருந்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே குருவராஜபேட்டை, காந்தி நகரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு ஸ்ரீகாந்த் (6) என்ற மகன் உள்ளான். பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் துளசி என்ற வாலிபரை செல்வி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு துளசியும் விபத்தில் இறந்து விட்டார்.

இதனால், செல்வி மகன் ஸ்ரீகாந்துடன் குருவராஜபேட்டையில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். மேலும் அரக்கோணம்-திருத்தணி சாலையில் உள்ள ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் செல்வி, தனது மகன் ஸ்ரீகாந்துடன் இரவில் வீட்டில் தூங்கச்சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆடைகள் களைந்து, கழுத்து, காது பகுதியில் ரத்தம் வடிந்த நிலையில் செல்வி இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, கிராம உதவியாளர் மகேஷ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அண்ணாமலை அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ரபேல்லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வேலூரில் இருந்து மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர்.

பின்னர், ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் இரவு நானும், எனது அம்மாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். சில நேரங்கள் வீட்டின் முன்பாக திண்ணையில் உட்கார்ந்து இருப்பார். எனது அம்மா என்னை ஒரு அறையில் தூங்க வைத்துவிட்டு மற்றொரு அறைக்கு சென்றார். அவருடன் அந்த நபரும் உள்ளே சென்றார். நான் நன்றாக தூங்கி விட்டேன்.

சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்தபோது அந்த நபர் எனது அம்மாவின் கழுத்தை காலால் நெரித்து கொண்டிருந்தார். நான் பயத்தில் சத்தம் போடாமல் படுத்து இருந்தேன். சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து பீரோவை திறந்து அதில் இருந்த பொருட்களை சிதறி போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

அவர் சென்றவுடன் நான் அழுது கொண்டே ஓடிச்சென்று எங்கள் வீட்டின் அருகில் உள்ள தாத்தா வெங்கடேசன் வீட்டிற்கு சென்று அவரிடம் நடந்ததை தெரிவித்தேன். எனது தாத்தா எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

இவ்வாறு அவன் கூறினான்.

போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசிவிட்டு செல்வது தெரிய வந்தது. போலீசார் அந்த வாலிபரின் போட்டோவை சிறுவன் ஸ்ரீகாந்திடம் காட்டி, இவர்தானா? என்று கேட்டபோது சிறுவன் இவர்தான் வந்தார், எனது அம்மாவிடம் தகராறு செய்தார். நான் சத்தம் போட்டால் என்னை கொன்று விடுவார் என்று பயந்து நான் தூங்குவது போல் நடித்து விட்டேன் என்றான்.

அந்த வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வாலிபரை பிடிக்க காஞ்சீபுரம் சென்று உள்ளனர்.

இந்த கொலை குறித்து போலீசார் கூறுகையில், செல்வியுடன் உல்லாசமாக இருந்தபிறகு கொலை செய்துவிட்டு சென்ற வாலிபர், கொலையை திசை திருப்புவதற்காக திருட்டு நாடகம் நடத்தி உள்ளார். வீட்டில் இருந்த பீரோவில் உள்ள பொருட்களை கலைத்து போட்டுவிட்டு அதில் இருந்த சில பொருட்களை எடுத்து சென்று உள்ளார். போலீசார் துரித விசாரணையின் மூலம் குற்றவாளியை நெருங்கி விட்டனர். 24 மணி நேரத்தில் குற்றவாளி பிடிபடுவார் என்றனர்.

இந்த சம்பவம் குருவராஜபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story