பா.ஜனதா., காங்கிரசார் ‘அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள்’ ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு


பா.ஜனதா., காங்கிரசார் ‘அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள்’ ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Oct 2018 11:15 PM GMT (Updated: 22 Oct 2018 7:14 PM GMT)

பா.ஜனதா, காங்கிரசார் அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர். ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

ராஜபாளையம்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான ஜி.ராமகிருஷ்ணன் ராஜபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

சபரிமலை குறித்த தீர்ப்பை வரவேற்ற காங்கிரசும், பா.ஜனதாவும், குறுகிய அரசியல் நோக்கத்தோடு ஆதாயம் தேடுவதற்காக மக்களை திரட்டி தகராறு செய்து வருகின்றனர். கேரள அரசு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல் படக்கூடியது. அரசியல் சட்ட அமர்வு அளித்த தீர்ப்பை செயல்படுத்தும் நோக்கில் கேரள அரசு செயல்படுகிறது.

இந்த தீர்ப்பை பொது மக்கள் பெரும்பகுதியினர் எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கின்றனர். தோள் சீலை அணியக் கூடாது, தமிழகத்தில் தொட்டால் தீட்டு, கேரளாவில் பார்த்தாலே தீட்டு என்கிற பல நிலைகளை கடந்துதான் தற்போது முன்னேற்றம் கண்டிருக்கிறோம். முத்தாலாக் விவகாரத்தில் பெண்களுக்கு சமத்தும் வேண்டும் என்பவர்கள், சபரிமலை தீர்ப்பில் ஏன் சமத்துவத்தை வேண்டாம் என்கிறார்கள் என தெரியவில்லை.

வருணாசிரம அடிப்படையில் சாதிபடி நிலை, சாதி ஏற்ற தாழ்வு இருக்க கூடாது என்பதுதான் அரசியல் சட்டம். சட்டத்தால் தடை செய்யப் பட்டாலும், சமூகத்தில் வேறுபாடுகள் நீடித்து கொண்டுள்ளது. சலுகைகளுக்காகத்தான் சாதி பிரிக்கப்பட்டுள்ளது. மனு தர்மத்தில் பெண்கள் தோள் சீலை அணியக் கூடாது என்பது எழுதப்படவில்லை. ஒவ்வொரு சாதியிலும் பல பழக்க வழக்கங்கள் இருந்தது. தற்போது அதை கடந்து சென்று கொண்டிருக்கிறோம். மீண்டும் அந்த பழைய பழக்கம் நீடிக்க கூடாது.

சொத்து வரி உயர்வை எதிர்த்து 29–ந் தேதி தமிழக அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சென்னையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. பல்வேறு வரிகள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்படைந்துள்ள மக்கள் தற்போது இந்த சொத்துவரி உயர்வால் பாதிக்கப்படுவார்கள். மேலும் சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்களிடையே எந்த கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப் படவில்லை. வரி உயர்வு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்ய வேண்டும்.

கட்சி தலைவர்கள் கருத்துகளை தெரிவிக்கும் போது, பெண்களையோ, மாற்றுத் திறனாளிகளையோ, நலிவடைந்த பிரிவினரையோ, அவமானப் படுத்தும் படியாகவோ, பரிகாசிக்கும் முறையிலோ வார்த்தைகள் மற்றும் பழமொழிகளை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு கூறினார்.


Next Story