எடக்காடு பஜாரில் துணிகரம் : அடகு கடையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
எடக்காடு பஜாரில் அடகு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ளது எடக்காடு. இங்குள்ள பஜாரில் தலையட்டியை சேர்ந்த சகாதேவன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு, தலையட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை 7.30 மணிக்கு கடையை திறக்க எடக்காடு பஜாருக்கு வந்தார். அப்போது கடையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகாதேவன், மஞ்சூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மஞ்சூர் போலீசார் விரைந்து வந்து, கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கடையில் இருந்த நகைகளை மட்டும் சகாதேவன் வழக்கம்போல் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டதால், அவை தப்பின. இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இதற்கிடையில் எடக்காடு நடுஹட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது வீட்டில் கதவை உடைத்து, ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களில் சாவியை சொருகும் இடத்தை உடைத்து, திருடி செல்லவும் முயற்சி நடந்துள்ளது. எடக்காடு பகுதியில் நடந்த மேற்கண்ட சம்பவங்களால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மேலும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுஹித் நிஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story