அருண்ஜெட்லியின் உருவப்படத்தை எரிக்க முயற்சி: இளைஞர் காங்கிரசார் 65 பேர் கைது
மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற இளைஞர் காங்கிரசார் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
வங்கி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு வங்கி மோசடியில் தொடர்புடையவர்களிடம் இருந்து பணபரிமாற்றம் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மத்திய மந்திரி அருண்ஜெட்லிக்கு எதிராக புதுவையில் இளைஞர் காங்கிரசார் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலையருகே கூடிய அவர்கள் அருண் ஜெட்லி பதவி விலகக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் லட்சுமிகாந்தன், வேல்முருகன், ஜெய்னா, காளிமுத்து, பொதுச்செயலாளர்கள் விக்னேஷ், தரணிதரன், லப்பு உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது சிலர் மத்திய மந்திரி அருண்ஜெட்லியின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அதை தடுக்க முயன்றதால் போலீசாருக்கும் இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இளைஞர் காங்கிரசார் 65 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரம் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.