பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் ; டிரைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் ; டிரைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:51 PM GMT)

திண்டுக்கல்லில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து கழக ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டிரைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் 240 நாட்கள் வேலை செய்ததும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

எனவே, பணி நிரந்தரம் செய்யக்கோரி திண்டுக்கல் மண்டல அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். கொட்டும் பனியிலும் விடிய, விடிய அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் சில தொழிலாளர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்த டிரைவர் முருகேசனும் (வயது 50) பங்கேற்று இருந்தார். இதற்கிடையே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்ட நிர்வாக இயக்குனர் சேனாதிபதி, திண்டுக்கல் மண்டல மேலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story