ஓசூர்: டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 25 பேர் பாதிப்பு - மருத்துவ இணை இயக்குனர் தகவல்


ஓசூர்: டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 25 பேர் பாதிப்பு - மருத்துவ இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:15 PM GMT (Updated: 23 Oct 2018 10:00 PM GMT)

ஓசூர் பகுதியில் கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ இணை இயக்குனர் தெரிவித்தார்.

ஓசூர்,

ஓசூர் பகுதியில் கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் தோறும், ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு, சென்னை மருத்துவ இயக்குனரக இணை இயக்குனர் செல்வராஜ் நேற்று நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலரிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர், மருத்துவ இயக்குனரக இணை இயக்குனர் செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மாநில எல்லையில் உள்ள தொழில் நகரமான ஓசூர் பகுதியில், அதிகளவில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் 15 பேர் டெங்குவினாலும், 10 பேர் பன்றிக்காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அதனை தடுக்கும்பொருட்டு தேவையான அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


Next Story