மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் கடலுக்குள் தவறி விழுந்து மீனவர் மாயம்
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் கடலுக்குள் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதியில் சுமார் 550–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 150–க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் காற்றுக்கு ஏற்றாற்போல் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்வது வழக்கம். நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி இல்லாததால் குறிப்பிட்ட தூரம் மட்டும் சென்று மீன்பிடித்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மீனவர் கருப்பசாமி(வயது 40) என்பவர் தனது மகன் கண்ணனுடன் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இடி– மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கருப்பசாமி மீது மின்னல் தாக்கியதில் நிலைகுலைந்த அவர் கடலுக்குள் தவறி விழுந்தார்.
இதைக்கண்ட அவரது மகன் கண்ணன் தனது தந்தையை மீட்க முயன்றுள்ளார். அதற்குள் கருப்பசாமி கடலில் மூழ்கி விட்டார். இதனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் கண்ணன் உடனடியாக அந்த படகின் மூலம் கரை திரும்பினார். மேலும் இதுகுறித்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மீனவர்களிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து மீன்துறையினருக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர்கள் மாயமான மீனவரை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். அதன்பேரில் கடலோர காவல்படையினரும், மீனவர்களும் கடலுக்கு சென்று தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமும் மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.