ஐகோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது வழக்கு விரைவில் விசாரணை


ஐகோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது வழக்கு விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 27 Oct 2018 4:30 AM IST (Updated: 27 Oct 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது வழக்குபதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன்–மீனாட்சி தம்பதி. இவர்கள், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும் தங்களுக்கு வயதாகி விட்டதால் மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் கோர்ட்டில் கடந்த 2016–ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கதிரேசன்–மீனாட்சி தாக்கல் செய்துள்ள மனு பொய்யானது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய அவரது பள்ளிச்சான்றிதழ் மற்றும் ஆவணங்களை இருதரப்பினரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி சான்றிதழ்களை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.

விசாரணை முடிவில், தனுசுக்கு எதிராக மேலூர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை 6–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என்று நாங்கள் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது அவர் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டவை. கோர்ட்டில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடி செய்த நடிகர் தனுஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை கோ.புதூர் போலீசில் ஒரு வருடத்துக்கு முன்பு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த மோசடி குறித்து தனுஷ் மீது வழக்குபதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டில் ஏற்கனவே கதிரேசன் தரப்பினர் மனுதாக்கல் செய்தனர். ஆனால், இதுதொடர்பாக கீழ்கோர்ட்டை அணுகும்படி அப்போது ஐகோர்ட்டு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story