நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:45 AM IST (Updated: 27 Oct 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது, அவர்கள் பேசியதாவது:-

அரசு வழங்கும் மானியங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி பிடித்தம் செய்ய கூடாது. நமது மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் ரசாயனம் மூலம் விளைவிக்கப்படுவதால், பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். படேதலாவ் ஏரி முதல் காட்டாகரம் ஏரி செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும். சூறாவாளி காற்றால் விழுந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போச்சம்பள்ளி வேளாண் விற்பனை கூடத்தில் புளி, கடலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மின் இணைப்புகள் உடனே வழங்க வேண்டும். தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர் வட்டத்தில் ஜல்லி கிரஷர்களால் விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

இதனை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் மற்றும் மதகுகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து கலெக்டர் பிரபாகர், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசுகையில், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சூளகிரியில் காய்கறிகள் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு, பழரசம் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வார விவசாயிகள் முன்வர வேண்டும். குடிநீர் தொடர்பான புகார்களுக்கு அலுவலர்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கோரி, 13 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளது. வரிசைப்படி மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிகிரஷர்களில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story