விவசாயியை சுட்டுக்கொன்ற வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியை சுட்டுக்கொன்ற வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 10:45 PM GMT (Updated: 26 Oct 2018 10:11 PM GMT)

கொல்லிமலையில் விவசாயி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள தின்னனூர் நாடு மங்களம்பட்டியை சேர்ந்தவர் சொல்ல.ஜெயராஜ் (வயது 55). விவசாயி. இவரது மகன் ஜெயபால், கடந்த 2011-ம் ஆண்டு சொல்ல.ஜெயராஜின் தங்கை மகளான ராதாவை காதலித்ததோடு, திருமணம் செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சொல்ல.ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் சொல்ல.ஜெயராஜின் குடும்பத்தாருக்கும், அவரது தங்கை குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராதாவின் சகோதரர்கள் வெங்கடாசலம் (37), நாகராஜ்(30) ஆகியோர் உறவினர் மணிகண்டன் (37) என்பவருடன் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி சொல்ல.ஜெயராஜை நாட்டு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

இது தொடர்பாக வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே 3 பேரும் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நாமக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் அந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் சி.ம.சிவக்குமார் வாதாடினார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து 3 பேரையும் கோவை சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



Next Story