சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம்: இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் - காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி


சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம்: இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் - காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2018 11:15 PM GMT (Updated: 28 Oct 2018 7:45 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

காங்கேயம்,

இந்து முன்னணியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார்.

இந்து முன்னணி சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பொங்கலூரில் ஆன்மிக திருவிழா நடக்க உள்ளது. இதில் யானையை வைத்து கஜபூஜையும், 108 குதிரைகளை வைத்து அசுவமேத பூஜையும், மீனாட்சி திருக்கல்யாணம், 1,008 நாட்டு பசுக்கள் வைத்து கோபூஜை, ஆண்டாள் திருக்கல்யாணம், 2 நாட்கள் மகாலட்சுமி யாகம், ஒரு லட்சத்து 8 குடும்பங்களை வைத்து யாகம் ஆகியவை நடத்தப்படுகிறது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இந்து முன்னணி இந்து மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கேரள மக்கள் கொதித்து எழுந்துள்ளார்கள். அங்கு கம்யூனிஸ்டு அரசாங்கம். இந்த தீர்ப்பை கூறிய நீதிபதி கம்யூனிஸ்டை சேர்ந்தவர். வழக்கை பதிவு செய்தவர் வேறு மதத்தை சேர்ந்த பெண் வக்கீல், இதில் பெரிய அளவில் சதி இருக்கிறது என்று இந்து முன்னணி சந்தேகிக்கிறது.

கேரளாவில் இந்து மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கம் காணாமல் போய்விடும். இதற்காக தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு பஞ்சாயத்து வாரியாக கூட்டங்கள் நடத்தி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story