தேனியில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 110 கிலோ கஞ்சா பறிமுதல்- பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
தேனியில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து வந்தாலும் கஞ்சா விற்பனை குறையவில்லை. கோவைக்கு கடத்தி வரப்படும் கஞ்சா பெரும்பாலும் ஆந்திராவில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பஸ், ரெயில் மூலம் கொண்டு வந்து விற்கப்படுகிறது. கோவையில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை போலீசார் கைது செய்து அவர்கள் கொடுக்கும் தகவலின்படி மொத்த வியாபாரிகளையும் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், காரில் 2 பேர் கோவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக பீளமேடு போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில், அந்த காரில் 110 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த காரில் வந்த இருவரும் தேனி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (வயது 43), சக்திவேல் (49) என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story