தீபாவளி இலவச பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 வழங்கக்கோரி புதுச்சேரி கேபினட் அறை முன்பு எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்


தீபாவளி இலவச பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 வழங்கக்கோரி புதுச்சேரி கேபினட் அறை முன்பு எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2018 6:00 AM IST (Updated: 31 Oct 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி இலவச பொருட்களுக்கு பதிலாக ரே‌ஷன் கார்டுகளுக்கு தலா ரூ.1000 வழங்கக்கோரி கேபினட் அறை முன்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் கார்டுகளுக்கு துணிகள் மற்றும் சர்க்கரை, அரிசி போன்ற இலவச பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு இலவச துணிகள், பொருட்கள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே நேற்று இரவு 8 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கிய உடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், தி.மு.க. எம்.எல்.ஏ., சிவா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர். பாலன், தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி ஆகியோர் சட்டமன்ற வளாகத்திற்கு சென்றனர். அவர்கள் கேபினட் கூட்டம் நடைபெற்ற அறையின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் ரே‌ஷன் கார்டுகளுக்கு தீபாவளி இலவச பொருட்கள் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த உடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்கள் இங்கு வர வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்கள் அங்கு வந்தனர்.

அப்போது தீபாவளி இலவச பொருட்களுக்கு பதிலாக ஒவ்வொரு ரே‌ஷன் கார்டுகளுக்கும் பணமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு இலவச பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் அமைச்சரவை கூட்டத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினோம். அப்போது முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் அவர்களிடம் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது.

எனவே இனிமேல் பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடியாது. அதற்கு பதிலாக ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதனை அங்கன்வாடி மையம் மூலமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதனை முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு ரூ.35 கோடி நிதி தேவைப்படும். தற்போது போதுமான நிதி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிப்பதாக கூறினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story