பெரியகுளம் அருகே வரதட்சணை கொடுமை: தூக்குப்போட்டு பெண் தற்கொலை - மாமனார்-நாத்தனார் கைது


பெரியகுளம் அருகே வரதட்சணை கொடுமை: தூக்குப்போட்டு பெண் தற்கொலை - மாமனார்-நாத்தனார் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 11:15 PM GMT (Updated: 4 Nov 2018 8:33 PM GMT)

பெரியகுளம் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார்-நாத்தனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). இவரது மகன் செல்வபாண்டியன். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்வி (22) என்பவருக்கும் கடந்த 3.9.2017 அன்று திருமணம் நடந்தது. செல்வபாண்டியன் சவுதிஅரேபியாவில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். அவருடன் மனைவி செல்வியும் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செல்வபாண்டியனின் தாய் பாண்டியம்மாள் இறந்துவிட்டார். எனவே வெளிநாட்டில் இருந்து கணவன்-மனைவி இருவரும் எ.புதுப்பட்டிக்கு வந்தனர். பின்னர் மனைவி செல்வியை, தந்தைக்கு சமைத்து கொடுக்க இங்கே இருக்குமாறு கூறி விட்டு செல்வபாண்டியன் மட்டும் சவுதிஅரேபியாவுக்கு திரும்ப சென்றார்.

இந்நிலையில் செல்வியிடம் அவரது மாமனார் ராஜேந்திரன், நாத்தனார் வைரமணி, அவரது கணவர் புலிமுருகன் ஆகிய 3 பேரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். மேலும் செல்வபாண்டியன் சவுதி அரேபியாவிலிருந்து செல்போன் மூலமாக செல்வியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் திருமண சீர்வரிசை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மனமுடைந்த செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்குள்ளவர்கள் காப்பாற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் செல்வபாண்டியன், மாமனார் ராஜேந்திரன், நாத்தனார் வைரமணி, அவரது கணவர் புலிமுருகன் ஆகிய 4 பேர் மீது பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதையொட்டி மாமனார் ராஜேந்திரன்,நாத்தனார் வைரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்விக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரீத்தா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story