பெங்களூருவில் துப்பாக்கி விற்க முயற்சி: நடிகர் உள்பட 4 பேர் கைது


பெங்களூருவில் துப்பாக்கி விற்க முயற்சி: நடிகர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2018 4:30 AM IST (Updated: 5 Nov 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் துப்பாக்கி விற்க முயன்றதாக நடிகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெகதீஸ் நகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு கன்னட நடிகர் ஜெகதீஸ், மற்றொருவர் நின்று கொண்டிருந்தார்கள். உடனே அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, 2 பேரிடமும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது நடிகர் ஜெகதீசுடன் நின்ற நபரிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த நபர், நடிகர் ஜெகதீசுடன் சேர்ந்து துப்பாக்கி விற்பனை செய்ய காத்து நின்றதும் தெரிந்தது. இதையடுத்து, உப்பள்ளி கணேஷ் பேட்டையை சேர்ந்த நடிகரான ஜெகதீஸ் (வயது 31), எச்.ஏல்.எல் பகுதியை சேர்ந்த முகமது நிஜாம்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள். நடிகர் ஜெகதீஸ், கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வருகிறார். அவர் கன்னடத்தில் வெளியான “சர்கார்“ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ஆவார்.

கைதான 2 பேரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் நடிகர் ஜெகதீஸ், முகமது நிஜாம் கொடுத்த தகவலின் பேரில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த பெங்களூரு நியூதிப்பசந்திராவை சேர்ந்த சதீஸ்குமார்(44), கொத்தனூர் அருகே கே.நாராயணபுராவை சேர்ந்த சையத் சமீர் அகமது (32) ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். இவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 11 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

கைதான 4 பேர் மீதும் எச்.ஏல்.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


Next Story