தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் 20 டன்னுக்கும் மேல் குவிந்த குப்பைகள்


தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் 20 டன்னுக்கும் மேல் குவிந்த குப்பைகள்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 8:40 PM GMT)

தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் 20 டன்னுக்கும் மேலாக குப்பைகள் குவிந்தன.

திருச்சி,

திருச்சியில் நகை கடைகள், ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் நிறைந்த பகுதிகளாக என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சின்னக்கடைவீதி, நந்திகோவில் தெரு, மேலப்புலிவார்டு ரோடு ஆகியவை உள்ளன. தீபாவளியையொட்டி இந்த சாலைகளில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களும் பொருட்கள் வாங்குவதற்காக வந்த மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு முதல் நாள் விடிய விடிய வியாபாரம் நடைபெற்றது. இந்த பகுதிகளில் ஏராளமான தரைக்கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தீபாவளி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த கடைவீதிகளில் பிளாஸ்டிக் பைகள், பாலிதீன் கவர்கள், அட்டைப்பெட்டிகள், பட்டாசு வெடித்ததால் சிதறிய காகிதங்கள் என குப்பைகள் ஏராளமாக குவிந்து கிடந்தன. இவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் வந்து அள்ளி சென்றனர். கடைவீதிகளில் மட்டும் சுமார் 20 டன்னுக்கும் மேலாக குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

குப்பைகளை தனியாக எடுத்து வைத்து மாநகராட்சி வாகனங்களில் கொடுக்காமல் பொறுப்பற்ற முறையில் சாலைகளில் வீசி சென்ற வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

Next Story