படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஆற்றில் இறங்கி செல்லும் மக்கள் இன்று முதல் இலவசமாக படகு இயக்கப்படும் என அறிவிப்பு


படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஆற்றில் இறங்கி செல்லும் மக்கள் இன்று முதல் இலவசமாக படகு இயக்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:19 PM GMT)

அவரிக்காட்டில் 8 ஆண்டுகளாக நடைபெறும் பாலப்பணிகளால் படகில் காசு கொடுத்து பொதுமக்கள் சென்றனர். தற்போது படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் செல்கின்றனர். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக படகு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகாவில் அவரிக்காடு, வண்டல், குண்டூரான்வெளி ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 1,200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராம மக்களும் முற்றிலும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அவரிக்காடு-வண்டல் இடையே நல்லாறும் அடப்பாறும் உள்ளது. இந்த ஆற்றில் கோடைக்காலங்களில் தண்ணீர் வற்றிவிடுவதால் ஆற்றின் குறுக்கே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நடந்தும், மீனவர்கள் மீன் வியாபாரத்திற்கு நடந்தும் சென்று வருவார்கள்.

இதையடுத்து அவரிக்காட்டில் கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.14.6 கோடியில் இணைப்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும்் இந்த பாலப்பணிகள் இந்த ஆண்டு முடிந்து விடும் என்று அரசு தெரிவித்துள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் பாலப்பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே நடந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து வண்டல் கிராமத்தில் இருந்து அவரிகாட்டிற்கு படகு இயக்கப்பட்டு வந்தது. இந்த படகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 முறை இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிக்காடு, வண்டல் ஆகிய இடங்களுக்கு செல்ல பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் காசு கொடுத்து செல்ல வேண்டிய அவலம் இருந்தது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். படகில் செல்வதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆற்றில் இறங்கி கடந்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு சென்று மக்கள் குறைகளை கேட்டார். அப்போது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக படகு சவாரி இயக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story