மாவட்ட செய்திகள்

வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை + "||" + Dengue mosquitoes at Vellore Central Jail premises - Collector Raman warning to officers

வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை

வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை
வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் காணப்பட்டதால் ஜெயில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை உண்டாக்கும் கொசுப்புழுக்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. துப்புரவு பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வீடுகளில் தேவையில்லாத பொருட்கள், பாத்திரங்கள், பழைய டயர்கள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றி, பிளச்சிங் பவுடர் தெளித்து வருகின்றனர். இவற்றை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் கலெக்டர் ராமன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயிலின் சுவர் ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த அலுமினிய தட்டுகளில் மழைநீர் தேங்கி இருந்தன. அதில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்தன. அவற்றை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

அதேபோன்று அப்பகுதியில் பராமரிப்பின்றி காணப்பட்ட சிமெண்டு தொட்டியிலும் டெங்கு கொசுப்புழுக்கள் காணப்பட்டன. அதனையும் அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டர் அங்கிருந்த ஜெயில் அதிகாரிகளிடம், ஜெயில் வளாகத்தை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயில் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இதுபோன்று மீண்டும் கொசுப்புழுக்கள் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். ஜெயில் வளாகத்தை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். கொசுமருந்து அடிக்கடி அடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெயில் காவலர்கள், ஊழியர்களுக்கு கைகழுவும் முறை பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க மேற்கொள்ள வேண்டியது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், 4-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் உள்பட பலர் உடனிருந்தனர்.