காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது


காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 5:00 AM IST (Updated: 10 Nov 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தபோது அந்த நாட்டில் வேலை பார்த்து வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மும்தாஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

 அதனை தொடர்ந்து துபாயில் இருந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வந்த இவர்கள் இங்கு வீடு கட்டி கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு கலைவாணி (11) என்ற மகள் உள்ளார். நாளடைவில் கணவன்–மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் சமையல் அறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த மும்தாஜை அவரது கணவர் முனியசாமி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். அப்போது பள்ளிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த மகள் கலைவாணி தாயாரை தேடி சமையலறைக்கு சென்றபோது அறை பூட்டிக்கிடப்தையும், ரத்தம் வழிந்தோடியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து கிராம மக்களிடம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் வந்து பார்த்து விட்டு இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை சூப்பிரண்டு நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த மும்தாஜின் கணவர் முனியசாமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நதிப்பாலம் பகுதியில் பதுங்கிஇருந்த முனியசாமியை தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது முனியசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:– எனது மனைவி என் மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்தாள். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நான் அவளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு அவர்கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story