திருச்சி விமான நிலையத்தில் தொடரும் சம்பவம் ரூ.4 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் தொடரும் சம்பவம் ரூ.4 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 9:56 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை பயணிகள் கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 8-ந்தேதி இரவு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பயணி விஜயகுமாரிடம் ரூ.9¾ லட்சம் வெளிநாட்டு பணத்தை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி வேலுவின் (வயது34) உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பையில் அமெரிக்க டாலர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய ரூபாயின் மதிப்பில் மொத்தம் ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்கு வேலு உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதையடுத்து வேலுவிடம் இருந்து வெளிநாட்டு பணம் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story