மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை: பாலியல் தொல்லை கொடுத்த 3 பேராசிரியர்கள் கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை


மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை: பாலியல் தொல்லை கொடுத்த 3 பேராசிரியர்கள் கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2018 9:30 PM GMT (Updated: 11 Nov 2018 8:06 PM GMT)

மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேராசிரியர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி, 

திருப்பதி அலிபிரியில் ஆந்திர அரசுக்கு சொந்தமான ருயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த 2015–ம் ஆண்டு ஷில்பா என்ற மாணவி மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் மாணவி ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ரமணா மற்றும் போலீசார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கல்லூரியின் துறை தலைவர் ரவிக்குமார், பேராசிரியர்கள் கிருட்டி, சசிக்குமார் ஆகியோர் மாணவி ஷில்பாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது.

மேலும் அவர்கள் மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளனர். இதற்கு மாணவி உடன்படாததால் செய்முறை, எழுத்து தேர்வுகளில் மதிப்பெண்களை குறைத்தும், பாடத்தில் தேர்ச்சி பெறாமலும் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 பேராசிரியர்களையும் கைது செய்தனர். மேலும் இந்த தற்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story