பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் புதிய விசாரணை அதிகாரி நியமனம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழந்ததால் அந்த வழக்கை விசாரித்த கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய விசாரணை அதிகாரியாக அரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்–2 மாணவி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக சிட்லிங்குக்கு வந்த அந்த மாணவி இயற்கை உபாதைக்காக அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 22), சதீஷ் (22) என்ற 2 வாலிபர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் தொடர்பாக போலீசார் உடனடியாக உரிய விசாரணை நடத்தவில்லை. இதுதொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை எண் 1077–க்கு மாணவியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து முறையாக விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தல் சென்ற பின்னரே போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி கடந்த 10–ந்தேதி காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சிட்லிங் கிராம மக்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்ய கோரி சிட்லிங் பகுதியில் 2 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் வாக்குமூலத்தை மாற்றி இருப்பதாக ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தபோது அவர்களிடம் போலீசார் ரூ.6 ஆயிரம் பெற்று உள்ளனர். இதுதொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும். சிறுவர்–சிறுமிகள் மீதான குற்றங்கள் தொடர்பான புகார்கள் வரும்போது சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்து உரிய வழிகாட்டுதல்களை பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்த விவகாரத்தில் அந்த விதிமுறை சரியான முறையில் பின்பற்றப்பட்டிருந்தால் மாணவி உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முறையான சிகிச்சையை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கும். ஆனால் இந்த விதிமுறைகளை விசாரணை நடத்திய போலீசார் முறையாக பின்பற்றவில்லை. இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததால் 2 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். இந்த நிலையில் கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று ஆயுதபடைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அரூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் எத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பாக அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.