‘வாட்ஸ்–அப்’பில் வீடியோ வெளியாகி பரபரப்பு; லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
லஞ்சம் வாங்கியதாக ‘வாட்ஸ்–அப்’பில் வீடியோ வெளியானதையடுத்து கவுந்தப்பாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி, தனது மகன் கவியரசுவுடன் ஒரு காரில் சம்பவத்தன்று கோபியில் இருந்து ஈரோடு நோக்கி சென்றார். மின்னவேட்டுவம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே தர்மபுரியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மொபட்டில் வந்துகொண்டு இருந்தார். திடீரென காரும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஜெகநாதன் படுகாயம் அடைந்ததையடுத்து, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி ராமசாமி மற்றும் கவியரசை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தார். அப்போது அவர்கள் 2 பேரிடமும் சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம், ஆவணங்களுடன் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் லஞ்சம் வாங்கிய வீடியோ ‘வாட்ஸ்–அப்’பில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதற்கான அறிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் சண்முகத்தை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நடவடிக்கை எடுத்தார்.