மாவட்ட செய்திகள்

இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை + "||" + The case of a young woman's bone; Murdered by marrying to marry

இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை

இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே கண்மாய் பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் போலீசில் சரணடைந்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம். இந்த ஊரைச்சேர்ந்த விவசாயி வீரபாண்டி என்பவரின் மகள் மாலதி(வயது20). சென்னை கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு அங்கு வேலை தேடி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29–ந் தேதி திருவிழாவிற்கு வீட்டிற்கு வந்தவர் மாயமானார். என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்ததால் மகள் மாயமானது குறித்து தந்தை வீரபாண்டி திருஉத்தரகோசமங்கை போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13–ந் தேதி உத்தரகோசமங்கை விலக்கு அருகே கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் எலும்புகூடு எரிந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சத்திரக்குடி போலீசார் அங்கு சென்று பார்த்தபோது எலும்புக்கூடு மற்றும் அதன் அருகில் கிடந்த துப்பட்டாவை வைத்து விசாரித்ததில் அது மாயமான மாலதியின் துப்பட்டா என்பதை குடும்பத்தினர் உறுதிசெய்தனர். இருப்பினும் அதுகுறித்து உறுதியான தகவல் தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் மேற்கண்ட மாலதிக்கும் எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சிவக்குமார்(30) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிவக்குமாரை தேடிவந்தனர்.

அவர் மாயமாகி விட்டதால் சந்தேகம் வலுத்தது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் கிடந்த உடல் எலும்புகள் உள்ளிட்டவைகள் மாலதி தானா என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பட்டன.

இந்நிலையில் மேற்கண்ட சிவக்குமாரை மும்பை ரெயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து வந்தனர். மாலதியின் உடல் உறுப்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுஉள்ளதால் அதன் உறுதியான முடிவு வராத வரை அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாத நிலை இருந்ததாலும், சிவக்குமார் தனக்கு எதுவும் தெரியாது என்று

கூறியதாலும் அந்த சம்பவத்திற்காக அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக அவரை, போலீசார் ஊரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும், வழக்கு விசாரணைக்கு எந்த நேரம் அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உறுதிமொழி எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 11–ந் தேதி மண்டபம் பகுதியில் பணத்தேவைக்காக சிவக்குமார் மதுரை வியாபாரியிடம் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ய முயன்றபோது ரோந்து சென்ற மண்டபம் போலீசார் கைது செய்தனர்.

சிறையில் தனது நிலைமையை உடன் இருந்தவர்களிடம் சிவக்குமார் விளக்கி கொலைசெய்தது குறித்து கூறினாராம். தவறு செய்தது உண்மையாக இருந்தால் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று சிறையில் உடன் இருந்தவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதன்பின் ஜாமீனில் வெளிவந்த சிவக்குமார் நேற்று முன்தினம் கருங்குளம் கிராம நிர்வாக அதிகாரி பெனடிக் சூசை என்பவரிடம் உண்மைகளை கூறி சரணடைந்ததால் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டார்.

சிவக்குமாரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரபிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மாலதி கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக சிவக்குமார் கூறி உள்ளார். அதன் விவரம் வருமாறு:–

எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் 8–வது வரை படித்துள்ளார். காரேந்தல் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன. வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் சென்னையில் நிதிநிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கணவன்–மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர். அந்த சமயத்தில் சென்னைக்கு ரெயிலில் சென்றபோது மாலதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அவரிடம் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்து ஒருவரை ஒருவர் காதலித்து வந்தநிலையில் சிவக்குமார் மாலதியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனிடையே சிவக்குமாருக்கு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் வேலையை விட்டுவிட்டு ராமநாதபுரம் வந்துள்ளார். இங்கு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதில் 3 பேரை உறுப்பினராக சேர்த்துவிட்டால் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கும் என்பதால் அதனை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

தனது நிறுவனத்தில் மாலதியையும் உறுப்பினராக சேர்த்து அதற்கான பணம் பெற்றுக்கொண்டு பொருட்களை கொடுத்துள்ளார். ஆனால், உறுப்பினருக்கான பதிவு எண் கொடுக்கவில்லையாம். அந்த சமயத்தில் அவருக்கும் மனைவி தேன்மொழிக்கும் இடையே சமசரம் ஏற்பட்டதால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கி உள்ளனர்.

இதனால் சிவக்குமார் மாலதியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் மாலதி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும், உறுப்பினர் பதிவு எண் வாங்கி தரும்படியும் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தன்னை ஏமாற்ற நினைத்தால் அசிங்கபடுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார். ராமநாதபுரம் நகரில் சந்தித்தபோது இந்த தகராறு மிரட்டலாக மாறியுள்ளது. இதனால் மாலதியை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று சிவக்குமார் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29–ந் தேதி மாலதி பிரச்சினைக்கு முடிவுகட்டவேண்டும் என்று சிவக்குமாரை தேடி எல்.கருங்குளத்திற்கு வந்துள்ளார். இதை அறிந்து சிவக்குமார் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மாலதியை சந்தித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாலதி தான் தயாராக கொண்டு வந்த தாலியை தன் கழுத்தில் கட்டி மனைவியாக்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு சிவக்குமார் மறுத்ததால் தகராறு வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்த சிவக்குமார் மாலதியை பலமாக தாக்கி உள்ளார். கீழே விழுந்ததும் அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும், காலால் சரமாரியாக மிதித்து தாக்கி உள்ளார். அதில் முகத்தில் ரத்தம் வழிந்ததால் கழுத்தில் இருந்த துப்பட்டாவை வைத்து துடைத்துவிட்டு வீசியுள்ளார். இதன்பின்னர் வீட்டிற்கு சென்று கேனில் மண்எண்ணெய் எடுத்து வந்து முள் செடிகளின் மேல் மாலதியை போட்டு தீவைத்து எரித்துள்ளார்.

அவர் வைத்திருந்த கைப்பை, தாலி, மண்எண்ணெய் கேன் முதலியவற்றை அருகில் குழி தோண்டி புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். போலீசார் கவனம் தன்மேல் திரும்பி உள்ளதை அறிந்த சிவக்குமார் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சி அங்கிருந்து மும்பை சென்று நண்பர் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ரெயிலில் ஊருக்கு திரும்பி வரும்போது உடன் இருந்த வடநாட்டு ராணுவ வீரர் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு வந்த மாலதி கொலை குறித்த வாட்ஸ்–அப் தகவல் மூலம் சிவக்குமாரை அடையாளம் கண்டு தங்களுக்குள் அதுகுறித்து பேசியுள்ளனர். இதனால் தன்னை தாக்கிவிடுவார்கள் என்று அச்சமடைந்து அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கிய சிவக்குமார் ரெயில்வே போலீசாரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

அவர்கள் மூலமே ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிந்து அழைத்து வந்துள்ளனர். மாலதியின் உடல் எலும்புகள் மற்றும் பெற்றோரின் ரத்த மாதிரிகள் முதலியவற்றை வைத்து டி.என்.ஏ பரிசோதனை செய்த முடிவு வந்ததால் இறந்தது மாலதிதான் என்பதை உறுதி செய்தனர். கஞ்சா வழக்கில் சிவக்குமார் சிறையில் உள்ளதால் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நிலையில் அவராகவே ஜாமீனில் வெளிவந்து சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு புதைத்து வைத்து இருந்த மாலதியின் உடைமைகள், தோடு, மண்எண்ணெய் கேன் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை முடிவில் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிவக்குமாரை வருகிற 23–ந் தேதி வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். மாலதியை கொலை செய்தபின்னர் துப்பட்டாவை ரத்தக்கறையுடன் தூக்கி எறிந்ததை சசிக்குமார் மறந்துள்ளார். அந்த துப்பட்டா கிடைத்ததால்தான் மாலதி என்ற சந்தேகம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்த வழக்கு மாலதி மாயமாகி தேடுவதாகவே இறுதிவரை சென்றிருக்கும். சிவக்குமாரும் தப்பி இருப்பார். கண்மாய் கரையில் எலும்புக்கூடாக எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் கிடந்த சம்பவத்தில் குற்றவாளி யார் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் 4 மாதங்களுக்கு பின்னர் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. காதல் பிரச்சினையில் நடந்த கொலை வழக்கு: போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் விடுதலை
பெரம்பலூர் அருகே காதல் பிரச்சினையில் நடந்த கொலை வழக்கில் இருந்து போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
3. முதியவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது
கும்பகோணம் அருகே நடந்த முதியவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியார் கொலை மருமகன் கைது
முக்கொம்பு அருகே மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
5. குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு
குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.