டெங்கு, பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் பலி? சுகாதாரத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்பது குறித்து சுகாதாரத்துறை பதிலளிக்குமாறு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் தற்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களான டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் கிருமிகளால் பரவும் காய்ச்சல்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
எனவே போர்க்கால அடிப்படையில் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல்களுக்கான மருந்து, மாத்திரைகளை போதுமான அளவு இருப்பு வைக்கவும், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர். காய்ச்சலால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வருகிற 20–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 20–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.