கீழ்பவானி பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தாசில்தாரிடம் விவசாயிகள் மனு


கீழ்பவானி பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தாசில்தாரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:00 PM GMT (Updated: 14 Nov 2018 7:54 PM GMT)

கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டத்தில் 18 ஏக்கர் பரப்பில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நெல் சாகுபடிக்காக கடந்த ஆகஸ்டு மாதம் 1 தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பல ஏக்கர் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் நெல் நடும் பணி தாமதமாக தொடங்கப்பட்டது.

இதையடுத்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை எல்.12 பாசனக்கோட்ட விவசாயிகள் காங்கேயம் தாசில்தார் மகேஸ்வரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:–

எல்.11, எல்.12, எல்.13 கீழ்பவானி முறைநீர் பாசன சபைக்கு உள்பட்ட பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேவையான அளவு பாசன நீர் கிடைக்காமல் நடவு செய்துள்ள நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக சுத்தமாக வாய்க்காலில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டார்கள். கிணறு உள்ளவர்கள் மட்டும் நீர்பாசனம் செய்து வருகின்றனர். மற்ற வயல்கள் காய்ந்து வருகிறது.

விவசாயிகள் பலமுறை செயற்பொறியாளரிடம் முறையிட்டும் எங்கள் நெற்பயிர்களுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்கவில்லை. காய்ந்து வரும் நெற்பயிரை காப்பாற்ற, உடனடியாக போதிய அளவு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் முத்தூர் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என பாசன சபைகள் மூலம் முடிவு செய்துள்ளோம். போராட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story