துரைப்பாக்கத்தில் ஆட்டோ மோதி வாலிபர் பலி, டிரைவர் தற்கொலை
துரைப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி வாலிபர் பலியானார். போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சோழிங்கநல்லூர் நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக சென்றது. துரைப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டு இருந்த 2 பேர் மீது ஆட்டோ மோதியது. இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் சாலையை கடக்க முயன்ற துரைப்பாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் (35) என்பவர் மீது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் விபத்துக்கு காரணமான ஆட்டோவை எடுத்துக்கொண்டு டிரைவர் வேகமாக சென்றார். போலீசார் விரட்டி சென்று ஆட்டோவை மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ரஜினி (35) என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ரஜினியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார், போதை தெளிந்ததும் காலையில் விசாரணைக்கு அழைத்துவர வேண்டும் என்று கூறினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ரஜினி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.