சாராயம் காய்ச்ச கடத்தி வரப்பட்ட 4 டன் வெல்லம் பறிமுதல்; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் காய்ச்சுவதற்காக சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 4 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு,
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள சேராப்பட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக மைக்கேல்புரம் வழியாக வெல்லம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி–திருவண்ணாமலை சாலையில் மைக்கேல்புரம் ஓடை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 சரக்கு வாகனங்களை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் 2 பேரும் சரக்கு வாகனங்களை மெதுவாக இயக்கியபடி வந்தனர். பின்னர் அவர்கள் மெதுவாக சென்று கொண்டிருக்கும் போதே, சரக்கு வாகனத்தில் இருந்து குதித்து, அங்கிருந்து ஓடினர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். அப்போது ஒரு போலீஸ்காரரை சரக்கு வாகன டிரைவர்கள் 2 பேரும் கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் அந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்தனர். அதில் 2 வாகனங்களிலும் மொத்தம் 80 மூட்டைகளில் 4 டன் வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் 4 டன் வெல்லமும், சாராயம் காய்ச்சுவதற்காக கல்வராயன்மலையில் உள்ள சேராப்பட்டுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 டன் வெல்லம், 2 சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.