ரூ.20 கோடி பேர வழக்கில் கைது: பெங்களூரு கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் விடுதலை


ரூ.20 கோடி பேர வழக்கில் கைது: பெங்களூரு கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 14 Nov 2018 11:30 PM GMT (Updated: 14 Nov 2018 10:07 PM GMT)

பெங்களூரு கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பெங்களூரு,

ரூ.20 கோடி பேர வழக்கில் கைதான பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதைதொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர், முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி. இவர், பல்லாரியில் நடந்த கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்த ஜனார்த்தனரெட்டி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி இருந்தது.

அந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர் மறுநாள் (11-ந் தேதி) நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறி ஜனார்த்தனரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜனார்த்தனரெட்டி சார்பில், பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு எந்த தொடர்பும் இல்லை, அவர் 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கவில்லை, அத்துடன் நிதி நிறுவன அதிபர் பரீத் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ஜனார்த்தனரெட்டிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மூத்த வக்கீல் அனுமந்தராயா வாதாடி இருந்தார். ஆனால் ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்.

பின்னர் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு மீது இன்று(அதாவது நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெகதீஷ் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று மாலையில் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ.2 லட்சம் பிணைத்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ஜனார்த்தனரெட்டியின் வக்கீல் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டிக்கு வெற்றி கிடைத்துள்ளது. குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு எந்த நேரம் அழைத்தாலும் ஜனார்த்தனரெட்டி ஆஜராவார். விசாரணைக்கும் அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்’ என்றார்.

கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதால் கடந்த 4 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜனார்த்தனரெட்டி நிம்மதி அடைந்துள்ளார். முன்னதாக ஜாமீன் மனு மீது நீதிபதி தீர்ப்பு கூறப்பட இருந்ததால், நேற்று காலையில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள துளசி செடியை சுற்றி வந்து ஜனார்த்தனரெட்டி வழிபாடு செய்தார்.

ஆனால் சிறையில் வழங்கப்பட்ட உணவு எதையும் அவர் வாங்கி சாப்பிட மறுத்து விட்டார். பின்னர் வெளியில் இருந்து அவரது உறவினர் கொண்டு வந்திருந்த உணவை வாங்கி ஜனார்த்தனரெட்டி சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி நேற்று இரவு 8 மணி அளவில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.


Next Story