நிரந்தர அரசு ஊழியர்களாக நியமிக்கப்பட்டோருக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்


நிரந்தர அரசு ஊழியர்களாக நியமிக்கப்பட்டோருக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:59 PM GMT (Updated: 14 Nov 2018 10:59 PM GMT)

சத்துணவுத்திட்டத்தில் இருந்து நிரந்தர அரசு ஊழியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழக அரசின் சத்துணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியவற்றில் சுமார் 2 லட்சம் பேர் வேலைபார்த்து வருகின்றனர். இதில், சத்துணவுத்திட்டத்தில் பணியாற்றிய பி.எட். பட்டதாரிகள் மட்டும் அரசு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். பிற திட்டங்களில் வேலைபார்த்தவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிநியமனம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, நிரந்தர அரசு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து, சத்துணவுத்திட்ட ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் சங்கர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சத்துணவுத்திட்ட ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர் நிலை–2, ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் நிலை–2 ஆகியோர் கடந்த 2003–ம் ஆண்டு நிரந்தர அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், குறைந்த காலமே அரசு பணியில் வேலைபார்த்து ஓய்வூதியம் இல்லாமல் ஓய்வு பெற்றுள்ளனர்.

சத்துணவு திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால், தற்போது அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் மற்றும் பணிக்கொடை ஒரு லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். இதையடுத்து, 15 வருடங்களாக ஓய்வூதியம் இல்லாமல் இருப்பவர்கள் தொடர்ந்த வழக்கில், சத்துணவு பணி காலத்தில் 50 சதவீதத்தை, நிரந்தர அரசுப்பணிக்காலத்துடன் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே, சத்துணவுத்திட்டத்தில் 25 வருடங்கள் பணியாற்றி, நிரந்தர அரசு பணியாளர்களாக வேலைபார்த்தவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story