சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் - எச்.ராஜா வலியுறுத்தல்


சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் - எச்.ராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Nov 2018 12:06 AM GMT (Updated: 15 Nov 2018 12:06 AM GMT)

சபரிமலை விவகாரத்தில், மறுசீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

பழனி,

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனிக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை கோவிலுக்கு வயது வரம்பின்றி ஆண், பெண் என யாரும் வந்து தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்த விசாரணை ஜனவரி மாதம் 22-ந்தேதி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. உடனடியாக அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 18-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் நிர்வாண கோலத்தில் விளம்பர படத்தில் நடித்தவர் ரெஹானா. இவர் கமாண்டோ படை வீரர் போல் உடை அணிந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வந்தால், அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சபரிமலை பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றவே தான் முயற்சிப்பதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறி வருகிறார். அப்படியென்றால் கடந்த 2008-ம் ஆண்டு பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றவும் தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பை பினராயி விஜயன் ஏன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே மக்களின் கேள்வியாக எதிரொலிக்கிறது.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக அங்கு கும்பாபிஷேக பணிகளை கோவில் அதிகாரிகள் தொடங்காவிட்டால் பா.ஜ.க. சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் பிரதமர் மோடியை நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து அதற்காக பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கூறி வருகிறார். அவரால் மக்களிடம் மோடி பெற்றுள்ள நம்பிக்கையை அசைக்கக்கூட முடியாது.

இந்த உண்மை விரைவில் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தினால் முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story