கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:45 PM GMT (Updated: 15 Nov 2018 7:28 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி,

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில், ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார செயலாளர் முத்து, அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் சிவானந்தம் வரவேற்று பேசினார். மாநில பிரதிநிதி மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 21 மாத ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும். மாதந்தோறும் மருத்துவ படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆணைப்படி முழுமையான ஓய்வூதியம் பயன்கள் வழங்க வேண்டும்.

80 வயது முடிந்த அனைவருக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 15 ஆண்டுகள் ஓய்வூதிய தொகுப்பு தொகை பிடித்தம் முடிந்தவர்களுக்கு உடனடியாக முழு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அரசு பஸ்களில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாதம் ரூ.350 பிடித்த செய்வது குறைக்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கு குறைந்த பென்சன் ரூ.9,000 வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உத்தமநாதன் நன்றி கூறினார்.

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பிரசார செயலாளர் அய்யண்ண பிள்ளை கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் மாவட்ட தலைவர் திருமேனிநாதன், ஊரக வளர்ச்சி துறை மண்டல செயலாளர் கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் பிச்சையப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

இதேபோல் கறம்பக்குடியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாரிமுத்து முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ராமக்கண்ணு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் கீரனூரில் ஓய்வூதியர் சங்க துணைதலைவர் தியாக சாந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story