சென்னை முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை


சென்னை முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 16 Nov 2018 9:45 PM GMT (Updated: 16 Nov 2018 7:13 PM GMT)

சென்னை முழுவதும் மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

குட்கா ஊழல் வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, புதிதாக குட்கா வியாபாரிகள் 2 பேர் தமிழகம் முழுவதும் குட்கா வியாபாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

காய்கறி ஏற்றி வரும் லாரிகளில் மறைத்து குட்கா போதைப்பொருளை மூட்டை மூட்டையாக கடத்திவந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. அதன்பேரில் நேற்று சென்னையில் 12 துணை கமிஷனர் சரகங்களிலும், மாநில போதைப்பொருள் தடுப்பு போலீஸ் பிரிவை சேர்ந்த 120 போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவின்பேரில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த சோதனை வேட்டைக்கு தலைமை தாங்கினார்கள்.

புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் மட்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன் தலைமையில் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கஞ்சா வியாபாரம் செய்யும் பழைய குற்றவாளிகளின் வீடுகளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

பள்ளி-கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள பெட்டிக்கடைகளிலும் சோதனை நடத்தினார்கள். இதுதவிர சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலை தொடங்கி இரவிலும் சோதனை நீடித்தது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் குறித்த விவரம் சோதனை முடிந்தபிறகு தெரிவிக்கப்படும் என போதைப்பொருள் தடுப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story