கஜா புயலால் உருக்குலைந்தது காரைக்கால்: 3 ஆயிரம் மரங்கள்; 200 மின்கம்பங்கள் சாய்ந்தன - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


கஜா புயலால் உருக்குலைந்தது காரைக்கால்: 3 ஆயிரம் மரங்கள்; 200 மின்கம்பங்கள் சாய்ந்தன - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 17 Nov 2018 4:45 AM IST (Updated: 17 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் காரைக்கால் உருக்குலைந்து விட்டது. காரைக்கால் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 3 ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. 200 மின்கம்பங்கள் விழுந்து, பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

காரைக்கால்,

கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதும் காரைக்கால் பகுதியில் பலத்த காற்று வீசியது. காரைக்கால் பாரதியார் வீதி, காமராஜ் சாலை, நேரு வீதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 3 ஆயிரம் மரங்கள் விழுந்தன. இதனால் நகரத்தின் அடையாளமே மாறி உள்ளது. மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதிகள், வெட்ட வெளியாக காட்சி அளிக்கின்றன.

நேற்று காலை சாலைகள் எங்கும் மரக்கிளைகளால் மூடப்பட்டு இருந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சாலையில் விழுந்து கிடந்தன. காலை 8 மணி வரையிலும் புயல் காற்று வீசியபடி இருந்ததால், மரங்களை அகற்றுதல், மின் கம்பங்களை சீரமைத்தல் உள்ளிட்ட மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

புயலின் தாக்கம் குறைந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று காரைக்கால் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுடன் பொதுமக்களும் மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

காரைக்கால் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் புயலில் விழுந்து விட்டதாக அதிகாரிகள் கூறினர். மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை காரைக்கால் சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டனர். அதேபோல மரங்களை அகற்றும் பணியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

காரைக்கால் பகுதியில் உள்ள 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடற்கரையோரம் கட்டி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் புயல் காற்று காரணமாக ஒன்றோடொன்று மோதியும், தலை குப்புற கவிழ்ந்தும் சேதம் அடைந்தன. 100-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்து உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

புயல் காற்றுடன் பலத்த மழையும் பெய்ததால் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் பலவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் காரைக்கால் பகுதியில் புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் கேசவன் நேற்று இரவு அறிவித்தார்.




Next Story