பொள்ளாச்சி பகுதியில் மழை: குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை


பொள்ளாச்சி பகுதியில் மழை: குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 17 Nov 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆழியாறில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

பொள்ளாச்சி,

கஜா புயல் காரணமாக பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. நேற்று காலையில் பெய்ய தொடங்கிய மழை விடாது பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. கோட்டூர் ரோடு, மீன்கரை ரோடு மேம்பாலங்களின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. காற்றின் வேகம் மற்றும் மழை காரணமாக ஆழியாறில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் புதர்களை கொண்டு அடைக்கப்பட்டது.

ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் நீர்வீழ்ச்சிக்கு வந்த வாகனங்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினார்கள். வால்பாறை செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதாலும், படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டால் ஆழியாறுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

கஜா புயல் காரணமாக வால்பாறை பகுதியில் மழை பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பலத்த மழை பெய்தால், நீர்வீழ்ச்சியில் வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாளை (இன்று) நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வால்பாறை ரோடு, டாப்சிலிப் ரோடு மற்றும் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் மரங்கள் விழுந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மீட்பு பணிகளில் ஈடுபட வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story