மறுகட்டமைப்பு பணிகள் தீவிரம்: மதுரை ரெயில் நிலையத்தில் நுழைந்தால் இனி கட்டணம்தான்


மறுகட்டமைப்பு பணிகள் தீவிரம்: மதுரை ரெயில் நிலையத்தில் நுழைந்தால் இனி கட்டணம்தான்
x
தினத்தந்தி 17 Nov 2018 3:45 AM IST (Updated: 17 Nov 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதி விமான நிலையங்களை போல மறுகட்டமைப்பு செய்யும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்த பணிகள் முடிந்ததும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

இந்திய ரெயில்வேயின் ஒவ்வொரு பிரிவுகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பணிகள் கூட தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சென்னை சென்டிரல், கேரள மாநிலம் கோழிக்கோடு ரெயில்நிலையம் ஆகியன தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளன. இதற்காக முக்கிய ரெயில்நிலையங்களில் ரெயில் நிலைய இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ரெயில்நிலையத்திலும், குறிப்பிட்ட சில பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்டமாக ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதி சீரமைப்பு செய்யப்படுகிறது. படிப்படியாக இந்த பணிகள் ரெயில் நிலையம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக 2 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதில் முதற்கட்ட பணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பிரிவில், இந்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் ரெயில்வே அமைச்சகத்தின் கூட்டு பங்களிப்புடன் சுற்றுலா பயணிகளை கவரும் வடிவமைப்பு திட்டத்தின் கீழ் மதுரை ரெயில்நிலையத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை கொண்டு கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ள கார், ஆட்டோ நிறுத்துமிடம், பஸ் நிறுத்துமிடம், முகப்பு பகுதி ஆகியன சீரமைக்கப்பட உள்ளன. இதன் மறுகட்டமைப்பு விமான நிலையங்களில் இருப்பது போல காணப்படும் என்று கூறப்படுகிறது. மதுரை ரெயில்நிலையத்துக்கு வந்து செல்லும் பஸ்களுக்காக ரெயில் நிலையத்தின் முன்புறம் இருந்த பூங்கா அகற்றப்பட்டு சாலைகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் ரெயில் நிலையத்துக்கு வரும் வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது.

கார், ஆட்டோ, இரு சக்கர வாகன நிறுத்துமிடங்கள், பயணிகள் வந்து செல்லும் பாதை ஆகியன மாற்றியமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளை திருச்சியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மதுரை ரெயில்நிலையத்திற்குள் உள்ள பயணிகள் தகவல் மையம் இடமாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல, மருத்துவ உதவி மையம் ரெயில்நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் பாதையில் பயணிகளின் வசதிக்காக 2-வது பாதை நிரந்தரமாக அமைக்கப்படுகிறது. பயணிகள் தங்கும் அறையின் ஒரு பகுதி ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிறுவனம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அறைகளை ஒதுக்கியுள்ளது.

அதேபோல, முக்கிய பிரமுகர்கள் காத்திருக்கும் அறை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மூலம் கட்டப்பட உள்ளது. இந்த அறைக்கான கட்டணத்தை தனியார் நிறுவனம் மூலம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்நிலைய பிளாட்பாரங்கள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப மேம்படுத்தப்பட உள்ளன.

அதாவது, இனிமேல் ரெயில்நிலைய வளாகத்துக்குள் நுழைவதற்கே பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும். ரெயில்நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் ஒரேயொரு நிறுவனத்துக்கு 3 வருடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவிலான டெண்டர் விடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story