தஞ்சை மாவட்டத்தில் 72 நிவாரண முகாம்களில் 9,360 பேர் தங்க வைப்பு - கலெக்டர் அண்ணாதுரை தகவல்


தஞ்சை மாவட்டத்தில் 72 நிவாரண முகாம்களில் 9,360 பேர் தங்க வைப்பு - கலெக்டர் அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2018 5:16 AM IST (Updated: 17 Nov 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 72 நிவாரண முகாம்களில் 9,360 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் கீழே விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் காற்று வேகமாக வீசியது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 72 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,800 ஆண்கள், 4,250 பெண்கள், 1,310 குழந்தைகள் என 9,360 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க 48 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஜெனரேட்டர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் தனியாக வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட கணக்கெடுப்பின்படி 3 பசுமாடுகள் இறந்துள்ளன. 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

இவற்றை சீரமைக்க 3,300 புதிய மின்கம்பங்கள் தயாராக உள்ளன. சீரமைப்பு பணியில் ஈடுபட தமிழகஅரசு, சிறப்புக்குழுவை அனுப்புகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story