கஜா புயல் பாதிப்பு உள்ளதா? என பார்வையிட வந்த கண்காணிப்பு அதிகாரியிடம் மீனவர்கள் வாக்குவாதம்


கஜா புயல் பாதிப்பு உள்ளதா? என பார்வையிட வந்த கண்காணிப்பு அதிகாரியிடம் மீனவர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 17 Nov 2018 5:34 AM IST (Updated: 17 Nov 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் புயல் பாதிப்பு உள்ளதா? என பார்வையிட வந்த கண்காணிப்பு அதிகாரியிடம் மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வானூர்,

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் நேற்று முன்தினம் இரவு நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த புயல் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டவுன், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புயலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு கண்காணிப்பு அதிகாரியாக பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கஜா புயல் கரையை கடந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்று கண்காணிப்பு அதிகாரி கடலோர கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

அந்த வகையில் அதிகாரி பழனிசாமி நேற்று பொம்மையார்பாளையம், தந்திராயன்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது பொம்மையார்பாளையத்தில் கடலோர கிராமத்தில் கடற்கரையோரம் மண் அரிப்பால் சேதமடைந்து வீடு இடிந்து கிடப்பதையும், தென்னை மரம் வேரோடு சாய்ந்து கிடப்பதையும் பார்வையிட்டார். இடிந்து விழுந்த வீடு பழைய வீடு என்பதாலும் அதில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்பதாலும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அப்பகுதிகளை பார்வையிட்ட அதிகாரி பழனிசாமி, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள் தங்கள் பகுதி கடல் அலையால் ஏற்படும் மண்அரிப்பால் பாதிக்கப்படுவதாகவும், அதனை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பல முறை மனு செய்தும், துண்டில் வளைவு அமைக்கப்படவில்லை என்றும் தங்கள் குறைகளை தெரிவித்தனர். மேலும் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரி பழனிசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மீனவர்களை சமாதானம் செய்த அதிகாரி பழனிசாமி, ‘‘உங்களின் கோரிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்து அவர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக’’ உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து மீனவர்கள் சமாதானம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரி மற்ற பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றார்.


Next Story