பெலகாவியில் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம்


பெலகாவியில் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2018 5:49 AM IST (Updated: 17 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி பெலகாவியில் கரும்பு விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெலகாவி, 

கரும்பு விவசாயிகள்  இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 19-ந்தேதி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.

சர்க்கரை ஆலைகளிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத்தொகையை வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க கோரி கரும்பு விவசாயிகள் பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகள் போராட்டத்தில் பெலகாவி எம்.பி.யும், பா.ஜனதா தலைவருமான சுரேஷ் அங்கடி கலந்துகொண்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயி, செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை சக விவசாயிகள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறக்கினர்.

கரும்பு விவசாயிகளின் இந்த போராட்டம் மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கரும்பு பாக்கித்தொகையை வழங்க கோரி பெலகாவி பகுதியில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியில் விவசாயிகளாக இருக்கட்டும், பிற அமைப்புகளாக இருக்கட்டும், யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது எனது கருத்து.

வருகிற 19-ந் தேதி நானே பெலகாவிக்கு சென்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து வைப்பேன். அது முடியாவிட்டால், விவசாயிகளை விதான சவுதாவுக்கு அழைத்து பேசுவேன். போராட்டத்தை வாபஸ் பெறும்படி தொலைபேசி மூலம் விவசாயிகளுடன் பேசினேன்.

சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வழங்குவது குறித்து பெலகாவி மாவட்ட கலெக்டர் ஏற்கனவே ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இப்போது அவர்கள் திடீரென தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள். இது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

இது விவசாயிகளின் அரசு. பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதை விடுத்து அரசுக்கு கெடு விதிப்பது சரியல்ல. விவசாயிகள் பிரச்சினைகளில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. ஜனார்த்தனரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தால், அது முதல்-மந்திரி பதவிக்கு அவமானமாக அமைந்துவிடும். நான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன். பழிவாங்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தால், 2006-ம் ஆண்டிலேயே அதை செய்திருப்பேன். மோசடி வழக்கு விசாரணையில் நாங்கள் தலையிடவில்லை. இதில் போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். அவர்கள் விசாரணையை நடத்துகிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story