‘கஜா’ புயலால் உருக்குலைந்த கொடைக்கானலில் மீட்பு பணிகள் மும்முரம்: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு


‘கஜா’ புயலால் உருக்குலைந்த கொடைக்கானலில் மீட்பு பணிகள் மும்முரம்: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2018 11:30 PM GMT (Updated: 17 Nov 2018 9:06 PM GMT)

“கஜா” புயலால் உருக் குலைந்த கொடைக்கானலில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொடைக்கானல்,

‘கஜா’ புயலால் நேற்று முன்தினம் கொடைக்கானல் பகுதியில் கனமழை கொட்டியது. அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் புயலால் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. பெருமாள் மலை உள்பட பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் லாரிகள், கார்கள் உள்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் கொடைக்கானல் நகர சாலைகள், கொடைக்கானல்-வத்தலக்குண்டு, கொடைக்கானல்- பழனி சாலையில் பல்வேறு மரங்கள் விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அதேபோல் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சார வினியோகம் முழுமையாக தடைபட்டது. இதனால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

இதைத்தொடர்ந்து புயலால் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் போலீசார், நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் கொடைக்கானல் ஏரிச்சாலையில் நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் மரங்களை அகற்றினர்.

அப்போது நேற்று முன்தினம் விழுந்த ஒரு மரத்தின் கிளைகளுக்கு அடியில் 2 மாடுகள் சிக்கி இருந்ததை கண்டனர். அதை பார்த்த மீட்பு குழுவினர் மரத்தை அகற்றி மாடுகளை மீட்டனர். மேலும் காயம் அடைந்த 2 மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அதில் ஒரு மாடு இறந்தது.

அதேபோல் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், கல்லறை மேடு உள்பட பகுதிகளில் விழுந்த மரங்கள் நேற்று அகற்றப்பட்டன. இதன் காரணமாக நேற்று வத்தலக்குண்டு சாலையில் காலை 7 மணி முதல் சிறிய வாகனங்களின் போக்குவரத்து தொடங்கியது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றதால், மாலை 3 மணி அளவில் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டன. எனினும், சரக்கு லாரிகள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே டைகர் சோலை பகுதியில் நேற்று லேசான மண்சரிவு ஏற்பட்டது. இதை அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக சென்று மண் சரிவை அகற்றினர். மேலும் இதர பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேற்று கொடைக்கானலில் நடைபெறும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பெருமாள்மலை, ஊத்து, குருசடி, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

அப்போது மின்சாரம் வழங்கவும், வாகன போக்குவரத்து முழுமையாக நடைபெறும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘கஜா’ புயலின் தாக்கம் கொடைக்கானலில் அதிகமாக இருந்துள்ளது. புயலால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். கொடைக்கானல் முழுவதும் விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, மின்சாரம் வழங்கப்படும், என்றார்.

இந்த ஆய்வின் போது உயர்கல்வித்துறை மற்றும் மண்டல கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா, கலெக்டர் டி.ஜி.வினய், எம்.பி.க்கள் உதயகுமார், பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கொடைக்கானலில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.


Next Story