தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம் எண்ணெய் லாரி விபத்து வழக்கில் முறைகேடு புகாரால் நடவடிக்கை?


தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம் எண்ணெய் லாரி விபத்து வழக்கில் முறைகேடு புகாரால் நடவடிக்கை?
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 3:54 PM GMT)

தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எண்ணெய் லாரி விபத்து வழக்கில் முறைகேடு புகாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 21–ம் தேதி கோவையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புடைய தேங்காய் எண்ணெய் பாரம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று தர்மபுரி அடுத்துள்ள தொப்பூர் அருகே வந்தபோது லாரியின் டயர் வெடித்து திடீரென தீப்பிடித்தது. இதனால் லாரி டிரைவர் சங்கர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.

அப்போது, பெங்களூருவை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு கியாஸ் டேங்கர் லாரி எரிந்துகொண்டிருந்த எண்ணெய் லாரி மீது மோதியது. இதில் அந்த வாகனங்களுக்கும் பரவியது. கியாஸ் லாரி காலியாக இருந்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரூ.40 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் எண்ணெயை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் லாரியில் இருந்து முக்கால் பாகம் இறக்கிவிட்டு, கால் பங்கு தேங்காய் எண்ணெய்யுடன் லாரியை எரித்துள்ளதை சேலம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

லாரியில் இருந்து திருடி பதுக்கி வைக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய, சேலம் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றபோது லாரி டிரைவர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் சேலம் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் தேங்காய் எண்ணெயை முக்கால் பங்கு பதுக்கி வைத்துவிட்டு, கால் பங்கு எண்ணெயுடன் லாரியை எரித்துவிட்டது தெரிய வந்தது. இந்த முறைகேட்டில் தொப்பூர் போலீசாருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை தர்மபுரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story