அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்படாமல் உள்ள குற்றவாளிகளை பிடிக்க விரைவில் தனிப்படை


அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்படாமல் உள்ள குற்றவாளிகளை பிடிக்க விரைவில் தனிப்படை
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 8:05 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படாமல் உள்ள குற்றவாளிகளை பிடிக்க விரைவில் தனிப்படை அமைக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் வழக்கமாக இரவு பணியில் மூன்றில் ஒரு பங்கு போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற சீனிவாசன் சிறப்பு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், இனிமேல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளும், ஆயுதப்படையில் உள்ள போலீஸ் அதிகாரிகளும் மற்றும் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அந்த உத்தரவு நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது.

அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் மாவட்ட முழுவதும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் இதர வழக்குகள் உட்பட மொத்தம் 290 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், வங்கிகள், நகை கடைகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றை கண்காணித்தும், பழைய குற்றவாளிகளை சோதனை செய்தும் இரவு முழுவதும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் விழிப்புடன் கண்காணிப்பில் இருந்து குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று, அடிதடி வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்படாமல் உள்ள குற்றவாளிகளை பிடிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விரைவில் போலீஸ் தனிப்படை அமைக்கப்படும். ஏதேனும் தங்கள் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடந்தால் 94981 81224 (காவல் கட்டுபாட்டு அறை, அரியலூர் மாவட்டம்) என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Next Story