கொட்டாம்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் ரூ.1 கோடி மோசடி கலெக்டரிடம் மனு
ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் போலி ரசீது தயாரித்து ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததில் மோசடி நடந்துள்ளதாக கூறி உதிர மக்கள் சேவை மையத்தின் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் எங்கள் மையத்தின் நிறுவனர் அசாருதீன் தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து தகவல் பெற்றார். அதில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பொது நிதியில் இருந்து ரூ.1 கோடியில் ஆழ்துளை கிணறு அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தபோது அதில் பொய்யான ரசீது தயாரித்து ரூ.1 கோடி வரை கணக்கு காட்டி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து விசாரணை நடத்த ஊராட்சி உதவி இயக்குனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் குடும்பத்தினரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வந்திருந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் அந்த நிவாரண தொகையை வழங்க வேண்டும். அதுபோல் நிவாரணம் வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி அருகே உள்ள தர்மஸ்தானம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி சாக்கடை நீருடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த இந்து காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள், தங்களது குழந்தைகளை மதமாற்றம் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் மலைப்பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ–மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.